காசிமேடு, சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் கையாளப்படுவதில் ஏற்படும் காலதாமதத்தால், சாலையில் 30 கி.மீ., துாரத்திற்கு கன்டெய்னர் லாரிகள் வரிசைக்கட்டி நிற்கின்றன.சென்னை துறைமுகத்தை பொறுத்தவரை, சி.சி.டி.எல்., மற்றும் சி.ஐ.டி.பி.எல்., தனியார் நிறுவனங்களின் கன்டெய்னர் முனையங்கள் செயல்படுகின்றன. இங்கிருந்து, ஆண்டிற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் கையாளப்படுகின்றன.கன்டெய்னர் முனையங்களை பொறுத்தவரை, ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட கிரேன் ஆப்பரேட்டர்கள் இருக்க வேண்டும். இதில், சி.ஐ.டி.பி.எல்., எனும் சென்னை பன்னாட்டு பெட்டக முனையத்தில்கன்டெய்னர்கள் 'ஷிப்ட்' செய்யும் கிரேன் ஆப்பரேட்டர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதாக கூறப்படுகிறது.கன்டெய்னர் முனையங்களை பொறுத்தவரை, ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட கிரேன் ஆப்பரேட்டர்கள் இருக்க வேண்டும். தற்போது, 25க்கும் குறைவானவர்களே உள்ளனர். அவர்களும், காலை 6:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை; மதியம் 2:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை; இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை என, மூன்று 'ஷிப்டு'களில் பணிபுரிகின்றனர்.அதேநேரம், துறைமுகத்திற்கு வரும் கன்டெய்னர் லாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இதனால், கன்டெய்னர் லாரிகள் நாட்கணக்கில் நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. காசிமேடு ஜீரோ கேட் துவங்கி டோல்கேட், திருவொற்றியூர், எர்ணாவூர் சத்தியமூர்த்தி நகர், ஜோதி நகர், சடையன் குப்பம், எம்.எப்.எல்., ஆண்டாள்குப்பம், மணலிபுதுநகர், கவுண்டர்பாளையம், அத்திப்பட்டு என, 30 கி.மீ., துாரத்திற்கு வரிசை கட்டி நின்றன. இதனால், நேற்று அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதில், காசிமேடு ஜீரோ கேட் துவங்கி திருவொற்றியூர் வரையில் கன்டெய்னர் லாரிகளுக்கு தனிப்பாதை உள்ளது. எர்ணாவூர் சத்தியமூர்த்தி நகர் துவங்கி அத்தப்பட்டு வரை பொதுப் பாதையில் பயணிக்கின்றன.இதனால், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், தனியார், அரசு பணியாளர்கள் என, அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து, அனைத்து துறைமுக ட்ரைலர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலர் சுரேஷ்பாபு கூறியதாவது:
கன்டெய்னர்களை கிரேன் மூலம் கையாள புதிதாக சேர்க்கப்படும் ஆப்பரேட்டர்கள் அனுபவமின்றி, 15,000 ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்தப்படுகின்றனர். புதிய ஆப்பரேட்டர்கள், அனுபவமின்றி நேரடியாக பெரிய சரக்கு பெட்டகங்களை கையாள்வதால், 10 நிமிடத்தில் முடிக்க வேண்டிய பணிக்கு, 2 மணி நேரமாகிறது. இதனால், கன்டெய்னர் லாரிகள் நாட்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது.நான்கு மாதங்களாக தொடரும் இப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. இதனால், ஓட்டுனர்கள் குடிநீர், கழிப்பறை, சாப்பாட்டு வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி லாரியில் காத்திருக்க வேண்டி உள்ளது.இந்த விஷயத்தில், சென்னை துறைமுக நிர்வாகம் கவனம் செலுத்தி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.