தினமும் 30,000 கிலோ ஆட்டிறைச்சி இறக்குமதி; ஹோட்டல்களுக்கு உணவுத்துறை எச்சரிக்கை
சென்னை: ''வெளிமாநிலங்களில் இருந்து, ரயிலில் தினமும், 30,000 கிலோ இறைச்சி கொண்டு வரப்பட்டு, ஹோட்டல்களில் பயன்படுத்தப்படுகிறது. கெட்டுப்போன இறைச்சி சமைப்பது கண்டறியப்பட்டால், உரிமம் ரத்து செய்யப்படும்,'' என, உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்கள், தலைமை சமையல் கலைஞர்கள் உள்ளிட்டோருடனான ஆலோசனை கூட்டம், உணவு பாதுகாப்பு துறை சார்பில் நேற்று நடந்தது.இதில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது:சென்னையில், 900 ரூபாய் வரை ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. அதனால், வெளிமாநிலத்தில் இருந்து, 500 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது.இரட்டை லாபம் கிடைப்பதால், ரயில் பெட்டில்களில் பாதுகாப்பற்ற முறையில் இறக்குமதி செய்து விற்பனை செய்கின்றனர். இதனால் தான், கெட்டுப்போன இறைச்சி பயன்பாட்டிற்கு வருகிறது. நிறைய லாபம் கிடைக்கும் என்ற பேராசையில் செயல்படுகின்றனர்.ஆட்டுக்கறி மேல், வேதி பொருட்களை பயன்படுத்தினால் கண்டறிய முடியும். அதற்கு பதிலாக பதப்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் மேல் செலுத்துகின்றனர். நீண்ட நேரம் இறைச்சியை கெடாமல் பாதுகாக்க இது பயன்படுகிறது. அவ்வாறு கண்டறியப்பட்டால், உடனே நீக்கிவிட வேண்டும்.இந்த வேதிப்பொருட்களால் இறைச்சி உண்போருக்கு தலை சுற்றல், மயக்கம் போன்றவற்றுடன், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. உணவு வகைகளை தயாரிக்கும்போது, வேதிப்பொருட்கள் கலந்த இறைச்சியா என்பதை கண்டறிதல் கடினமானது. சமைத்தப்பின் கண்டுபிடிப்பது அதை விட கடினம்.வெளிமாநிலங்களில் இருந்து, தமிழகத்தில் அதிகளவில் சுகாதாரமற்ற இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டாலும்,சென்னைக்கு தான் அதிகளவில் வருகிறது.ரயிலில் கொண்டு வரப்படும் இறைச்சி யாருக்கு வருகிறது, யார் வாயிலாக அனுப்பப்படுகிறது என்ற தகவல் இல்லை. பார்சலில் உள்ள ஜி.எஸ்.டி.,எண்ணை வைத்து கண்டறியமுயன்றாலும், அவை போலியானதாக உள்ளன.யாரோ சிலர் செய்யும் தவறுகளால், ஒட்டுமொத்த உணவு தொழில் துறையை பாதிக்கிறது. சென்னைக்கு தினமும் ரயில் வாயிலாக, 30,000 கிலோ இறைச்சி இறக்குமதி செய்யப்படுகிறது. பெரும்பாலான நட்சத்திர ஹோட்டல்கள், சுப நிகழ்ச்சிகளுக்கும், இதுபோன்ற இறைச்சி பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இத்தகைய இறைச்சிகளை கொள்முதல் செய்யும் உணவகங்களின் பெயர் பட்டியல் அதிகாரிகளிடம் உள்ளது.கெட்டுப்போன இறைச்சியால் சமைத்த உணவு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டால், முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதற்கு, ஹோட்டல் நிர்வாகம் விளக்கம் அளிக்காவிட்டால், உரிமம் ரத்து செய்யப்பட்டு, சீல் வைக்கப்படும். கெட்டுப்போன உணவை சாப்பிட்டு உயிரிழப்பு ஏற்பட்டால், ஹோட்டல் உரிமையாளர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.