காஞ்சியில் லாரிகள் மோதல் லிப்ட் கேட்டு சென்ற பெண் பலி
ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், பாலுசெட்டிசத்திரம் அருகே, பொன்னியம்மன் பட்டறை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சாந்தி, 40, பட்டம்மாள், 50, தாரணி, 38, பெருந்தேவி, 40. இவர்கள் நேற்று காலை, பொன்னியம்மன் பட்டறை பகுதியில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள சிவந்தாங்கல் பகுதிக்கு நடவு வேலைக்கு செல்ல, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியில் லிப்ட் கேட்டு ஏறினார்.வேலுாரில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரியை, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்னண், 49 என்பவர் ஓட்டினார். நான்கு பெண்களுடன், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் அடுத்த, கீரநல்லுார் அருகே லாரி வந்தது. அப்போது, கீரநல்லுார் சந்திப்பில் முன்னால் சென்ற மற்றொரு லாரி 'யு-டர்ன்' எடுக்க வேகத்தை குறைத்தது. அப்போது, பின்னால் வந்த டிப்பர் லாரி, முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது. இதில், லாரியில் இருந்த மூன்று பெண்கள், லாரியின் முன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு, சாலையில் விழுந்தனர்.இதில், சாந்தி, 40 என்பவர், அதே லாரி சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மூன்று பெண்களும் பலத்த காயம் அடைந்தனர்.காயமடைந்தவர்களை சுங்குவார்சத்திரம் போலீசார் மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுனர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.