உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முருகப்பெருமான் கோவில்களில் ஆடி கிருத்திகை கோலாகலம்

முருகப்பெருமான் கோவில்களில் ஆடி கிருத்திகை கோலாகலம்

முருகப்பெருமானுக்கான பிரதான விழாவாக கருதப்படும் ஆடி கிருத்திகை விழா சென்னை மற்றும் புறநகரில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.திருத்தணி முருகன் கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர்சேகர்பாபு குடும்பத்துடன்முருகப் பெருமானை தரிசித்தார்.

வடபழனி

வடபழனி ஆண்டவர் கோவிலில் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3:30 மணிக்கு பள்ளியெழுச்சி பூஜைகள் நடந்தன. காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை சிறப்பு பூஜைகள்மற்றும் பல்வேறு அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு வள்ளி, தேவசேனா சமேதராக சுப்பிரமணிய சுவாமி மயில் வாகத்தின் மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களின் நலனை கருத்தில் வைத்து சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை 5:00 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

வல்லக்கோட்டை

ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, கோ பூஜை, மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. ரத்தினங்கி சேவை அலங்காரத்தில், உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

குமரகோட்டம்

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவருக்கும், உற்சவர் முருகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கந்தபுராணம் அரங்கேற்றம் நடந்த மண்டபத்தில், சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் முருகப்பெருமானுக்கு, பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

திருப்போரூர்

திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின், சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனைகளும் நடந்தன.அதேபோல, கடம்பத்துார் கடம்பவன முருகன் கோவில், பிராட்வே கந்தக் கோட்டம், வானகரம், மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் கோவில், பெசன்ட்நகர் அறுபடைவீடு முருகன், குரோம்பேட்டை குமரன்குன்று, குன்றத்துார் முருகன் ஆகிய கோவில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன.- -நமது நிருபர்- -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை