பால் பண்ணையில் கழிவுநீர் தீர்ப்பாயத்தில் ஆவின் விளக்கம்
சென்னை அம்பத்துார் தொழிற்பேட்டையில் உள்ள ஆவின் பால் பண்ணை உள்ளிட்ட தொழிற்சாலை கழிவுகளால், கொரட்டூர் ஏரி மாசடைந்து வருவதை தடுக்க உத்தரவிடக்கோரி, பசுமை தீர்ப்பாயத்தில், கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் மனு தாக்கல் செய்தது.மனுவை விசாரித்த தீர்ப்பாயம், அம்பத்துார் பால் பண்ணைக்கு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம்,5.10 கோடி ரூபாய் அபராதம் விதித்தது தொடர்பாக பதில் அளிக்க, ஆவின் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து, தீர்ப்பாயத்தில் ஆவின் நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கை:அம்பத்துார் ஆவின் பால் பண்ணையில் இருந்து தினமும், 3.80 லட்சம் லிட்டர் முதல், 4.2 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தி வருகிறது. இந்த பண்ணையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சிறப்பாக இயங்கி வருகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர், பால் பண்ணை வளாகத்தில் உள்ள மரங்கள், செடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், வளாகத்திற்கு வெளியே விடப்படுவதில்லை. பருவமழையால் பால் பண்ணை வளாகத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. அப்போது, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தியது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அவ்வப்போது புதுப்பித்து வருகிறோம். அம்பத்துார் பால் பண்ணையில், 4,500 சதுரஅடி பரப்பில் கழிவுகள் கொட்டும் இடம் உள்ளது. அங்கு பிளாஸ்டிக், உலோக கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இவை, 45 நாட்களுக்கு ஒருமுறை அகற்றப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.