மடிப்பாக்கம், பல்லாவரம்- - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், மடிப்பாக்கம் போலீசார், மே 14ல் வாகன சோதனை நடத்தினர்.அவ்வழியே வந்த ஆட்டோ நிறுத்தி சோதனையிட்டதில், அதில் பயணித்தவரின் பையில், 6.5 கிலோ உயர் ரக கஞ்சா இருந்தது. அதன் மதிப்பு, 1.5 கோடி ரூபாய்.விசாரணையில் அந்த நபர், நங்கநல்லுாரைச் சேர்ந்த ஸ்ரீனிவாச ராகுல், 29, என்பதும், பெருங்களத்துாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிந்தது. அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.அவரிடம் விசாரித்ததில், பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் ஷேக் இப்ராஹீம், 29, என்பவர் இந்த கஞ்சாவை கொடுத்து, விற்பனை செய்ய சொன்னது தெரிந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் திருச்சி, மன்னார்புரம், புதிய காலனியில், ஷேக் இப்ராஹீம் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த தனிப்படை போலீசார், அவரை கைது செய்து, சென்னை மடிப்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.