| ADDED : ஜூன் 13, 2024 12:19 AM
சென்னை, 'மேம்படுத்தப்பட்ட கட்டண முறையால், நுகர்வோருக்கு இணையதளம் வாயிலாக பால் அட்டை பெறுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது' என ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத் கூறியுள்ளார். அவரது அறிக்கை:
நுகர்வோருக்கு குறைந்த விலையில் பால் அட்டைகள் வாயிலாக ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாள்தோறும் 4.50 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள், அட்டை வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. தேவையான பால் வகைகளை, சலுகை விலையில் பெற விரும்புவோர் நேரடியாக வட்டார அலுவலகங்களுக்கு சென்றும்,www.aavin.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்தும் பெற்று வருகின்றனர். எவ்வித சிரமமும் இன்றி தங்கள் இல்லங்களில் இருந்தே இணையதளம் வாயிலாக பால் அட்டைகளை பெறும் வசதிக்கு வரவேற்பு உள்ளது. இணையதளம் வாயிலாக பால் அட்டை விற்பனை மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. நடப்பு மாதம், பண பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கத்தில், 'பேமென்ட் கேட்வே' எனப்படும் மேம்படுத்தப்பட்ட கட்டண முறையை ஆவின் செயல்படுத்தியது. இதில், தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், நுகர்வோர் சிலருக்கு இணையதளம் வாயிலாக பால் அட்டை பெறுவதில் சற்று சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனை உடனடியாக சரிசெய்து, அனைத்து நுகர்வோருக்கும் இணையதளம் வாயிலாக,பால் அட்டை பெறுவதற்கு ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு வினீத் கூறியுள்ளார்.