கல்வியில் புதுமை புகுத்திய 100 ஆசிரியர்களுக்கு விருது
சென்னை,ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் 45 வயதுக்கு மேற்பட்ட 100 ஆசிரியர்களுக்கு 'ஆசிரியர் செம்மல்' விருது, சென்னையில் நேற்று வழங்கப்பட்டது.மயிலாப்பூரில் நடந்த விழாவில், தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் பெரியண்ணன் முன்னிலையில், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ், விருதுகளை வழங்கினார். கல்வியை புதுமையாக பயிற்றுவித்தது உள்ளிட்டவற்றின் அடிப்படையில், இந்த 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.வேல்ராஜ் பேசியதாவது:தமிழகத்தில் மற்ற துறைகளைவிட, கல்வித்துறை சிறப்பாக உள்ளது. தேசிய அளவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து உள்ளது. தற்போது தமிழகத்தில் 54 சதவீதமாக உள்ளது.கல்விச்சூழல் மேலும் வளர்ச்சியடைய, சிறந்த ஆசிரியர்களை உருவாக்க வேண்டும். மாணவர்களை, சிறந்த ஆசிரியர்களாக உருவாக்குவதே, ஆசிரியர்களின் முதல் கடமை. ஆனால், ஆசிரியர் பணிகளுக்குச் சிறந்தவர்கள் கிடைப்பதில்லை.கல்லுாரிகளைவிட, பள்ளி பருவத்தில்தான் மாணவர்களை சிறந்தவர்களாக மாற்ற முடியும். எனவே, பள்ளி ஆசிரியர்கள், தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுவது, மாணவர்கள் மற்றும் நாட்டிற்கு நல்லது.இவ்வாறு அவர் பேசினார்.