| ADDED : ஜூன் 26, 2024 12:08 AM
போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்; 15வது புது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி அ.தொ.பே., சார்பில் பல்லவன் இல்லத்தில் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பேரவை தலைவர் ராசு தலைமை வகித்தார்.பேரவை செயலர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். இதில், 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற தொழிற்சங்கத்தினரை, போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, பேரவைச் செயலர் கமலகண்ணன், தலைவர் ராசு உள்ளிட்டோர் போக்குவரத்து துறைச் செயலரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.இது குறித்து கமலகண்ணன் கூறியதாவது:அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து, பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்களை நடத்திய பிறகும், அரசு அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தி.மு.க., ஆட்சி பொறுப்புக்கு வந்த 100 நாட்களில் பிரச்னைகளை தீர்த்து விடுவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தனர். ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி பல மாதங்களுக்குப் பிறகே போக்குவரத்து தொழிலாளர்களுக்கு டி.ஏ., உயர்த்தப்படுகிறது. போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும், ஓட்டுனர், நடத்துனர் நியமனத்துக்கு டெண்டர் விடப்படுகிறது. சமூக நீதி பாதிக்கப்படும் இம்முறையை விடுத்து நேரடி நியமனம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.