மேலும் செய்திகள்
ரேஷனில் தே.எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்தல்
22-Aug-2024
திருவொற்றியூர், பகிங்ஹாம் கால்வாயில் எண்ணெய் படலம் பரவுவது தொடர்கதையாகி வருவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் அதிகமுள்ள நிலையில், எங்கிருந்து எண்ணெய் படலம் வருகிறது என்பதை கண்டறியாமல், அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக, மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும், புழல் - பூண்டி நீர்த்தேக்கங்களில் இருந்து திறக்கப்படும் உபரி நீர், 42 கி.மீ., பகிங்ஹாம் கால்வாய் வாயிலாக எண்ணுார் முகத்துவாரத்தில் கடலில் கலக்கும்.கடந்தாண்டு டிச., 'மிக்ஜாம்' புயலின்போது, பெருமழை கொட்டி தீர்த்தது. அதனால் புழலில் இருந்து, 3,000 கன அடி, பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து, 45,000 கன அடி என, வினாடிக்கு, 48,000 கன அடி அளவிற்கு உபரி நீர் திறக்கப்பட்டது.ஒரே நேரத்தில் அதிகப்படியான தண்ணீர் ஓடியதால், வெள்ளநீரை கடல் உள்வாங்கவில்லை. இதனால் பகிங்ஹாம் கால்வாய் நிரம்பி வழிந்து, அதை ஒட்டிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.வீடுகள், சாலைகளை சூழ்ந்ததோடு, முக்கிய எண்ணெய் நிறுவனங்களும் பாதிப்பை சந்தித்தன. இதனால், எண்ணெய் நிறுவனத்தில் இருந்து முதல் முறையாக வெள்ள நீருடன் எண்ணெய் கழிவும் கலந்து வெளியேறியது.திருவொற்றியூரின் மேற்கு பகுதியில் எட்டு கிராமங்கள் மற்றும் எண்ணுாரின் முகத்துவாரம் முழுதும் பாழாகி போனது.எண்ணெய் ஒட்டியதால், மீனவர்களின் வலைகள், படகுகள், இன்ஜின் உள்ளிட்டவை முழுதும் நாசமாயின. வீட்டு சுவர்கள், உபகரணங்களும் பழுதாகின.தவிர, பறவைகளின் சிறகுகளில் எண்ணெய் ஒட்டியதால், அவற்றால் பறக்க முடியாமல் சிரமப்பட்டன. கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன. நண்டு, இறால், மீன்கள் இனப்பெருக்கமும் பாதிக்கப்பட்டது.வாழ்வாதாரம், பொருளாதார இழப்பை சந்தித்த திருவொற்றியூர் மேற்கு மற்றும் எண்ணுாரின் மீனவ கிராமங்களைச் சேர்ந்த 8,000 பேருக்கு, அரசு அறிவுறுத்தல்படி, எண்ணெய் நிறுவனம் இழப்பீடு தொகை வழங்கியது.தொடர்ந்து, கால்வாயில் எண்ணெய் திட்டுகளை அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டது. பல நாட்களுக்கு எண்ணெய் திட்டு அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.எனினும், திருவொற்றியூர் குப்பைமேடு - எண்ணுார் முகத்துவாரம் வரையிலான பகிங்ஹாம் கால்வாயில், எண்ணெய் படலம் மிதப்பது தொடர்கதையாக உள்ளது. நேற்றும், அதிகபடியான எண்ணெய் படலம் பகிங்ஹாம் கால்வாயில் பரவியது.வடசென்னையில் முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் செயல்படும் நிலையில், எங்கிருந்து எண்ணெய் படலம் பகிங்ஹாம் கால்வாயில் பரவுகிறது என தெரியாததால், மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், மீன்வளம் அழிவதுடன், அதை சார்ந்து பிழைப்பு நடத்தும் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாக, அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இது குறித்து, எண்ணுார் நெட்டுகுப்பம் பகுதி மீனவர், இ.குமரவேல் கூறியதாவது:எண்ணெய் படலம் பிரச்னை, தொடர்ந்து நடக்கிறது. குறிப்பாக, நீர்நிலையை நம்பி பிழைப்பு நடத்தும் காட்டுகுப்பம், முகத்துவார குப்பம் போன்ற கிராமங்களை சேர்ந்து, 3,000க்கும் அதிமான மீனவர்கள் கடுமையான பாதிக்கின்றனர்.மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆய்வு என்ற பெயரில் கண்துடைப்பு செய்கிறது. ஏற்கனவே மீன்வளம் குறைந்துள்ளது. உரிய நடவடிக்கை இல்லாததால் என்ன செய்வது என தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார். குழப்பம்எண்ணெய் படலம், எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை. அதனால் யாருக்கும் எச்சரிக்கை 'நோட்டீஸ்' வழங்க முடியவில்லை. பகிங்ஹாம் கால்வாய் மாசு குறித்து, புகைபடத்துடன், மாசு கட்டுபாட்டு வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 15 நாட்களாக பாதிப்பு இல்லை. மீண்டும் பரவியுள்ளதால், ஆய்வு மேற்கொள்ளப்படும்.பொதுப்பணி துறை அதிகாரிபாதிப்பில்லைஎண்ணெய் படலம் தொடர்பாக எந்த புகாரும் பெறப்படவில்லை. டிச., மிக்ஜாம் புயலின்போது ஏற்பட்ட எண்ணெய் கழிவு பாதிப்பு போல், இது இல்லை. வீட்டு உபயோக நீரில் இருந்து வெளியேறும் எண்ணெய்போல் தான் உள்ளது. இதனால், பாதிப்பு இருக்காது. எனினும், எண்ணெய் கழிவு பிரச்னை உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்படும்.மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரி
22-Aug-2024