அமைந்தகரை:அமைந்தகரை, பூந்தல்லி நெடுஞ்சாலையில், மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான 'ரோஸ் மில்க்' கடை உள்ளது. இங்கு, வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு, ஊழியர்கள் கடையை மூடுவதற்காக சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடைக்கு வந்த இருவர், தாங்கள் ரவுடிகள் எனக் கூறி மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர்.கடை ஊழியர்கள் பணம் தர மறுத்ததால், மர்மநபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், அதில் இருவரை சரமாரியாக வெட்டி தப்பினர். இதில், பலத்த காயமடைந்த நாகலாந்தைச் சேர்ந்த நோக்பாக், 24, பைக்பாங், 20, இருவரையும், அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இது குறித்து கடையின் உரிமையாளர் மணிகண்டன், அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட அமைந்தகரை பி.பி., கார்டன் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், 23, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.அதேபோல, ஐஸ்ஹவுஸ், டாக்டர் பெசன்ட் சாலையைச் சேர்ந்தவர் மன்சூர், 38. இவர், வீட்டின் கீழ் தளத்தில் 15 ஆண்டுகளாக டீக்கடை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், மதுபோதையில் மூன்று பேர் கடைக்கு வந்துள்ளனர். பின், பணம் தராமல் சிகரெட், பன் உள்ளிட்டவற்றை வாங்கினர்.தொடர்ந்து டீக்கடைக்கு வந்த 50 வயது மதிக்கத்தக்கவரிடம் வீண் தகராறு செய்து, கடையில் இருந்த எட்டு பிஸ்கட் பாட்டில்களை உடைத்தது மட்டுமல்லாமல், உரிமையாளரை மிரட்டிச் சென்றுள்ளனர்.இது குறித்து ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.