புது கட்டடத்தில் கேபிள் பணி சுவர்கள், டைல்ஸ் சேதம்
நீதித்துறை அதிருப்தி
பொதுப்பணித்துறை வாயிலாக சென்னையில் உயர் நீதிமன்றம் உள்பட பல்வேறு இடங்களில் கட்டடங்கள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கட்டும் பணி நடந்து வருகிறது. நீதிபதிகள் பங்களாக்களும் பராமரிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள நீதித்துறை கட்டடங்கள் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. நீதித்துறை அதிகாரிகள், இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.சென்னை, ஆக. 24-பொதுப்பணித்துறை புதிய அலுவலக கட்டடத்தில் சுவர்கள், டைல்ஸ் கற்களை சேதப்படுத்தி கேபிள் அமைக்கும் பணி நடக்கிறது.பொதுப்பணித்துறை தலைமை அலுவலகமும், சென்னை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகமும், சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் இயங்கி வந்தது. இடநெருக்கடி காரணமாக, சென்னை மண்டல தலைமை அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு அ.தி.மு.க., ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 23 கோடி ரூபாய் செலவில், அங்கேயே மூன்று தளங்களுடன், 1.04 லட்சம் சதுர அடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, பிப்., மாதம் திறந்து வைத்தார். முதல்தளம், சென்னை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கும், இரண்டாவது தளம், தலைமை கட்டட கலைஞர் அலுவலகத்திற்கும், மூன்றாவது தளம், கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கும் ஒதுக்கப்பட்டது. ஐந்து கட்டட கலைஞர்கள் பயன்படுத்த வேண்டிய விசாலமான அறை, ஒரு கட்டட கலைஞருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பல அறைகள் ஒதுக்கீடு செய்தும் அவை பயன்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், கட்டடம் திறக்கப்பட்டு ஏழு மாதங்களுக்குப் பிறகு, இன்வெர்ட்டர் மற்றும் இணையதள கேபிள் அமைப்பதற்கு, சுவரை சேதப்படுத்தி 'ரேக்' பொருத்தப்பட்டு வருகிறது. பைப் புதைத்து செய்ய வேண்டிய பணியை, வெளியே ரேக் அமைத்து செய்வது சுவரை மட்டுமின்றி அலுவலகத்தின் அழகையும் பாழாக்கியுள்ளது. இதற்காக, அலுவலகத்தில் தரைத்தள டைல்ஸ் கற்களும் ஆங்காங்கே பெயர்த்து எடுக்கப்பட்டு உள்ளது. மற்ற துறைகளுக்கு கட்டடம் கட்டுவதில் முன் மாதிரியாக இருக்க வேண்டிய பொதுப்பணித்துறையின் கட்டுமானப்பிரிவு இப்படி செயல்படலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.