புழுதிவாக்கம் பஸ் நிலையம் முழு வீச்சில் இயங்க கோரிக்கை
புழுதிவாக்கம்:புழுதிவாக்கம், மந்தைவெளி தெருவில் செயல்படும் பேருந்து நிலையத்தில் இருந்து, பிரதான வழித்தடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், இந்நிலையத்தை தனியார் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். சமூக ஆர்வலர் கோபிநாத், 74, கூறியதாவது:புழுதிவாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலை மோசமான நிலையில் இருந்ததால், நான்கு ஆண்டுகளில், பேருந்து எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது; நிலையமும் முறையான பராமரிப்பின்றி, சுகாதாரமற்ற நிலைக்கு சென்றது.தற்போது, அனைத்து சாலைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டு, பேருந்து வந்து செல்ல உரிய சாலை வசதி உள்ளது. ஆனாலும், போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.இதனால், புழுதிவாக்கம், உள்ளகரம் பகுதிகளைச் சேர்ந்த பணிக்கு செல்லும் பெண்கள், மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.குடியிருப்புகள் இங்கு அதிகரித்து வருவதால், முக்கிய நிலையமாகவும் மாறியுள்ளது. தவிர, இங்கிருந்து, நகரின் முக்கியமான பகுதிகளுக்கு சென்றுவர, போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.