ஐ.டி., ஊழியரின் ஆப்பிள் ஐ - பேடு ஒப்படைத்த ஓட்டுநருக்கு பாராட்டு
மணலி,மணலி புது நகர், அருள் முருகன்நகர், விச்சூர் சாலையைச் சேர்ந்தவர் தன்யா சந்தோஷி, 29. இவர், பெங்களூரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணி புரிகிறார். தற்போது வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகிறார்.எம்.பி.ஏ., படிப்புக்காக, சென்னை பல்கலை சென்று, திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் வந்தார். பின் வீட்டிற்கு செல்வதற்கு ஆட்டோவில் ஏறினார்.ஆட்டோவின் பின்புறம் தன் ஆப்பிள் ஐ - பேடு மற்றும் சான்றிதழ்கள் அடங்கிய பையை வைத்தவர், மறந்து இறங்கினார். ஆட்டோ சென்று விட்டது.மணலி புதுநகரை சுற்றி, தன் தந்தையுடன் ஆட்டோவை தேடிய நிலையில் கிடைக்கவில்லை. மணலி புதுநகர் இன்ஸ்பெக்டர் பாஸ்கரிடம், தன்யா சந்தோஷி புகார் அளித்தார்.அதேநேரம், மணலி புதுநகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிவகுமார், ஆப்பிள் ஐ - பேடு, சான்றிதழ் அடங்கிய பையுடன் காவல் நிலையம் வந்து, போலீசாரிடம் ஒப்படைத்தார்.தொடர்ந்து போலீசார் பையை தன்யா சந்தோஷியிடம் ஒப்படைத்தனர். ஆட்டோ ஓட்டுநரை போலீசார் பாராட்டினர்.