எழும்பூர் - பீச் ரயில் பாதை சோதனை ஓட்டம் வெற்றி
சென்னை, சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே நடந்த ரயில் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்தது. கடந்த 2023ம் ஆண்டு முதல், சென்னை எழும்பூர் - கடற்கரை இடையிலான நான்காவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 6ம் தேதி, இந்த பாதையில் தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சோதனை ஓட்டம் நடத்தினர்.அதில் திருப்தியடைந்த நிலையில், நேற்று, ஒரு இன்ஜின் நான்கு பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடந்தது. அதை, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு செய்தார்.அவர், கோட்டை, பார்க் டவுன் உள்ளிட்ட நிலையங்களில் உள்ள சிக்னல், தண்டவாளம் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தார். அதில் அவர் திருப்தி அடைந்தார். அவரின் முழு ஒப்புதல் பெறப்பட்ட பின், இம்மாத இறுதிக்குள், இப்பாதையை பயன்பாட்டிற்கு கொண்டுவர ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.