பெண் துாய்மையாளரை கொன்று புதரில் வீசிய எலக்ட்ரீசியன் கைது
திருப்போரூர், வண்டலுார் அடுத்த, நல்லம்பாக்கத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி செல்வராணி, 38; மேலக்கோட்டையூர் ஐ.ஐ.ஐ.டி., கல்லுாரியில் ஒப்பந்த துாய்மை பணியாளர்.கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்ற செல்வராணி, வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கணவர் சங்கர், தாழம்பூர் போலீசில் 4ம் தேதி புகார் அளித்தார்.போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில், அதே கல்லுாரியில் எலக்ட்ரீசியன் வேலை செய்யும் குமரேசன், 30, என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில், செல்வராணியை கொலை செய்ததை குமரேசன் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.குமரேசன் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:செல்வராணிக்கும், குமரேசனுக்கும் நான்கு ஆண்டுகளாக பழக்கம் இருந்தது. இந்நிலையில், அதே கல்லுாரியில் பணிபுரியும் வேறு ஒருவருடன் செல்வராணி பழகினார். அது குமரேசனுக்கு பிடிக்கவில்லை.இந்நிலையில், சம்பவ நாளன்று, செல்வராணியை பைக்கில் குமிழி கிராமத்தில் உள்ள காப்பு காட்டுக்கு குமரேசன் அழைத்து சென்றுள்ளார். அங்கு, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த அவர், செல்வராணியின் கழுத்தை நெரித்து கொன்று, உடலை அங்கேயே புதரில் வீசிவிட்டு வந்துள்ளார்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.போலீசார், குமரேசன் கூறிய இடத்திற்கு சென்று, அழுகிய நிலையில் இருந்த செல்வராணியின் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.