தாம்பரம் மாநகராட்சி ஆபீஸ் சாலையில் ஆக்கிரமிப்புகளை தடுக்க நடைபாதை
தாம்பரம், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட ஐந்து நகராட்சிகள், பெருங்களத்துார், சிட்லப்பாக்கம் உள்ளிட்ட ஐந்து பேரூராட்சிகள் இணைந்து, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகத்திற்கு கட்டடம் இல்லாததால், மேற்கு தாம்பரம், முத்துரங்கம் தெருவில், நகராட்சி அலுவலகம் இயங்கி வந்த கட்டடத்தில், தற்போது மாநகராட்சி அலுவலகம் இயங்குகிறது.அலுவலகம் உள்ள சாலையின் இருபுறத்திலும், ஏகப்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், 'பீக் அவர்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.அவசரத்திற்கு, அதிகாரிகளின் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இந்நிலையில், ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசலை தவிர்க்கும் வகையில், தாம்பரம் மேம்பால பாதை மாற்றியமைக்கப்பட உள்ளது.இதற்காக, ஜீவா வணிக வளாகம் இடிக்கப்பட உள்ளது. இதை அடிப்படையாக கொண்டு, மாநகராட்சி அலுவலகம் உள்ள முத்துரங்கம் தெருவில், ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகையில், சாலையின் இருபுறமும் ஸ்டீல் கம்பி கைப்பிடியுடன் கூடிய நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதன் வாயிலாக, தற்போதுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வாகனங்கள் நெரிசல் இன்றி செல்ல முடியும். நடந்து செல்லும் மக்களும் பயன்பெறுவர்.