பைக் திருடி உல்லாசம் கொளத்துார் நண்பர்கள் கைது
கொளத்துார்:கொளத்துார், ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்தவர் முருகன், 47. கடந்த மாதம், இவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 'ஹோண்டா சி.பி.ஷைன்' பைக் திருடு போனது.கொளத்துார், ராஜமங்கலம் பகுதியில் தொடர்ந்து பைக்குகள் திருடு போவதால், கொளத்துார் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக, மர்ம நபர்களை தேடி வந்தனர்.இந்நிலையில், வில்லிவாக்கம் அருகே, சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கொளத்துார், சிவசக்தி நகரைச் சேர்ந்த ரமேஷ், 18, அவரது நண்பரான ராஜமங்கலம், இரண்டாவது தெருவைச் சேர்ந்த சைதன்யா, 18, என தெரிந்தது.பைக் திருடர்களான இவர்கள், மேற்கூறிய பகுதிகளில் திருடிய பைக்குகளை தனித்தனியாக கழற்றி, 'காயலான்' கடையில் விற்று, அதில் வரும் பணத்தில் உல்லாசமாக சுற்றித் திரிந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர். அவர்கள் பல்வேறு இடங்களில் மறைத்து வைத்திருந்த, நான்கு பைக்குகள் ஒரு இன்ஜின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.