கோடம்பாக்கம்,தேனாம்பேட்டை மண்டலம், கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் பகுதியில், ஒன்று முதல் 10 தெருக்களும், மைனர் டிரஸ்ட்புரம், வரதராஜபேட்டை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்குள்ள டிரஸ்ட்புரம் பகுதியில், குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தால், பாதாள சாக்கடைக்கான புதிய 'மேன்ஹோல்' அமைக்கும் பணி நடக்கிறது.கான்கிரீட்டால் செய்யப்பட்ட ராட்சத குழாய்கள், தெருவாரியாக பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, டிரஸ்ட்புரம் பகுதியில், ஒவ்வொரு தெரு முனையிலும் பள்ளம் எடுக்கப்பட்டு, குழாய் அமைக்கும் பணி நடக்கிறது. புலியூர் பிரதான சாலையில் உள்ள ஐந்து முதல் ஒன்பதாவது தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டு, கான்கிரீட் குழாய்கள் அமைக்கப்பட்டன. புதிய தார் சாலையில், பள்ளம் தோண்டி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தோண்டப்பட்ட பள்ளத்தை முறையாக மூடாமல், களிமண்களை அப்படியே விட்டுவிட்டனர். சில நாட்களாக பெய்து வரும் மழையால், இப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும், சாலையில் நடந்து செல்வோர் தடுமாறி கீழே விழுந்தும், விபத்தில் சிக்கி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, மணல்களை அகற்றி, பள்ளங்களை முறையாக சிமென்ட் கலவை பயன்படுத்தி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.