உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இயற்கை சூழல் பாதிக்காமல் இ.சி.ஆர்., விரிவாக்க பணி பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

இயற்கை சூழல் பாதிக்காமல் இ.சி.ஆர்., விரிவாக்க பணி பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை, 'மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணி நடக்கிறது. இதற்காக சாலையின் மேற்கு பகுதியில் உள்ள ஓதியூர் உப்பங்கழி ஏரி அழிக்கப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும்' என, சென்னையை சேர்ந்த சரவணன் என்பவர், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம், 'ஓதியூர் உப்பங்கழி ஏரிக்கு பாதிப்பு இல்லாமல், சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருந்தது. இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிற்பித்த உத்தரவு: கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணியை மேற்கொண்டு வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஓதியூர் உப்பங்கழி ஏரியில் பாலம் கட்டி வருகிறது. இதனால் நீரோட்டம் பாதிக்கப்படும் என்றும் மனுதாரர் புகார் தெரிவித்துள்ளார். நீரோட்டம் தடைபடாமல் இருப்பதற்காக, ஒரு பகுதியில், 'கா-பர் டேம்' அமைக்கப்பட்டு, மறு பகுதியில் பாலம் கட்டப்படுவதாகவும், பணிகள் முடிந்ததும், காபர் டேம் அகற்றப்படும் என்றும், ஆணையம் தெரிவித்துள்ளது.கடலையும், நதியையும் இணைக்கும் உப்பங்கழியில் பாலம் போன்ற கட்டுமானங்களை மேற்கொள்வது, கடல்வாழ் உயிரினங்கள், பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே, கடலோர மண் அடுக்குகளை பாதுகாத்து, கடற்கரையோர இயற்கை சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஓதியூர் உப்பங்கழியை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை