காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மொத்தம் உள்ள 51 வார்டுகளில், தி.மு.க., - 33, அ.தி.மு.க., - 8; காங்., - 1; பா.ஜ., -1; சுயேச்சைகள் எட்டு இடங்களில் வெற்றி பெற்றனர். மேயராக ஒன்பதாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மகாலட்சுமியும், துணை மேயராக 22வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் குமரகுருநாதனும் தேர்வு செய்யப்பட்டனர்.மாநகராட்சி நிர்வாகத்தில், மேயர் மகாலட்சுமியின் கணவர் யுவராஜின் ஆதிக்கம் அதிகமானதால், தி.மு.க., கவுன்சிலர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில், ஒரு தரப்பினருக்கே ஆதாயம் கிடைத்து வருவதாக பகிரங்க போர்க்கொடி உயர்ந்தது.இதனால், மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காமல், தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். சுயேச்சைகள் மட்டுமின்றி எதிர்க்கட்சி கவுன்சிலர்களும் அவர்களுடன் கைகோர்த்தனர். இதனால், மாநகராட்சி கூட்டத்தில், தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல் மேயருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.இந்நிலையில் தான், மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, 17 தி.மு.க., கவுன்சிலர்கள் கலெக்டர் கலைச்செல்வியிடம் கடந்த மாதம் 7ம் தேதி மனு அளித்தனர். அவர்களுடன், காங்., கட்சியைச் சேர்ந்த துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் அ.தி.மு.க., - 7, சுயேச்சைகள் - 5, பா.ஜ., - - 1 உட்பட 33 கவுன்சிலர்களும் இணைந்து, இத்தீர்மானத்திற்காக கமிஷனர் செந்தில்முருகனிடம் மனு அளித்தனர்.அமைச்சர் உதயநிதியின் ஆதரவாளராக மேயரின் கணவரும், தி.மு.க., இளைஞரணி மாவட்ட அமைப்பாளருமான யுவராஜ் இருப்பதால், அவருக்கு எதிராக, அதிருப்பதி அணியினரால் காய்நகர்த்த முடியாமல் போனது. இருப்பினும், தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்கள் தொடர்ந்து பிரச்னை செய்ததால், அவர்களை சமாதானப்படுத்த, தி.மு.க., மேலிடம் பல முயற்சிகளை எடுத்தது. அமைச்சர் நேரு, உத்திரமேரூர் எம்.எல்.ஏ.,வும் காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலர் சுந்தர், அமைப்பு செயலர் அன்பகம் கலை ஆகியோர் அடுத்தடுத்து நடத்திய பேச்சு அனைத்தும் தோல்வியில் முடிந்தன. மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற, மாநகராட்சி விதிகளின்படி ஐந்தில் நான்கு பங்கு கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஓட்டளிக்க வேண்டும். இதன்படி, மொத்தமுள்ள 51 கவுன்சிலர்களில் 41 பேர் கூட்டத்திற்கு வந்து தீர்மானத்தின் மீது ஓட்டளிக்க வேண்டும்.அதே நேரம், நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிக்க, ஐந்தில் ஒரு பங்குக்கு மேற்பட்டோர் ஓட்டளிக்க வேண்டும். இதன்படி, 10க்கு மேற்பட்டோர் ஓட்டளித்தால், மேயர் பதவி தப்பும். தற்போது மேயர் தரப்பிற்கு ஆதரவாக 13 தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளனர். அதே போல, தீர்மானத்தின் மீது ஓட்டளிக்க 41 கவுன்சிலர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இதற்கு குறைவான எண்ணிக்கையில் கவுன்சிலர்கள் பங்கேற்றாலும், தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது. எனவே, மேயருக்கு ஆதரவாக இருக்கும் கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தாலும், எதிரணி வெற்றி பெற முடியாது.இதற்கிடையே, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த கடைசி கட்ட நடவடிக்கைகளையும் தி.மு.க., மேலிடம் மேற்கொண்டது. இதன்படி, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த, மேயருக்கு ஆதரவாக செயல்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட பிரதிநிதி பிரகாஷ் மற்றும் மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் டில்லிகுமார் ஆகிய இருவரும் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டனர்.அதைத் தொடர்ந்து, வேறு மேயர் தரப்பிலும், சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேயர் எதிராக போர்க்கொடி துாக்கி வந்த 15க்கும் மேற்பட்ட தி.மு.க., கவுன்சிலர்கள், திடீரென அவரவர் குடும்பத்தினருடன் நேற்று மாலை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.இதனால், அவர்கள் நாளை நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்றும், இதனால் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படாது என்றும், மேயரின் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கட்சி மேலிடத்தில் இருந்து பேசி வருகின்றனர். கவுன்சிலர்கள் பகிரங்கமாக கருத்து வெளியிடக்கூடாது. தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட முடிவு செய்துள்ளோம். பிரச்னைக்கு தீர்வு காணப்படும். - ப.சுரேஷ், 30வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்தமிழக உள்ளாட்சி சட்டத்தில், 75 சதவீதம் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றால், நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும் என்ற சட்ட விதியை திருத்தம் செய்து, 80 சதவீதம் உறுப்பினர்கள் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது பதவியில் இருப்போரின் தரப்புக்கு சாதகமாக உள்ளது; ஜனநாயகத்திற்கு முரணாக இருக்கிறது. ஐந்தில், நான்கு பங்கு என்பது மிகவும் அதிகப்படியாக இருப்பதால், இது தி.மு.க., மேயருக்கு சாதகமாகவே இருக்கும். - மா.புனிதா சம்பத்,23-வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்