கூவம் கரையோர சுடுகாடு சீரமைப்பு
நெற்குன்றம்:நெற்குன்றம், கூவம் கரையோரம் புதர் மண்டி இருந்த சுடுகாட்டை, சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.நெற்குன்றம், வளசரவாக்கம் மண்டலம், 145வது வார்டு நெற்குன்றம் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கூவம் கரையோரம் மயான பூமி அமைந்துள்ளது. நெற்குன்றம் 145வது வார்டு பகுதி மக்கள், இந்த சுடுகாட்டை பல தலைமுறைகளாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், இந்த சுடுகாடு அமைந்துள்ள பகுதி, பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ளது. முறையான பராமரிப்பின்றி, புதர் மண்டி காணப்பட்டது. மழைக்காலத்தில் சுடுகாட்டை அப்பகுதிமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதுகுறித்து நம் நாளிதழில், தொடர்ந்து செய்திகள் வெளிவந்தன. அத்துடன், முறையாக பராமரிக்க பொதுப்பணி துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, மாநகராட்சி சார்பில், 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக சுடுகாட்டை சுத்தம் செய்யும் பணியில், மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.