சென்னை, திருமுல்லைவாயல் அருகே, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள நிலத்தை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்த வழக்கில், நிலத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த டி.ஹெச்.ராஜ்மோகன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு விபரம்: திருவள்ளுர் மாவட்டம், திருமுல்லைவாயல் கிராமத்தில், வனத்துறைக்கு சொந்தமான 40.95 ஏக்கர் நிலம் உள்ளது. இப்பகுதி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி.இந்த நிலத்தை வகை மாற்றம் செய்து, முன்னாள் எம்.எல்.ஏ., ஞானசேகரன், தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்து உள்ளார்.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள நிலங்களை வகை மாற்றம் செய்யும் முன், மத்திய அரசிடம் உரிய அனுமதிகளை பெறவில்லை. அந்த தனியார் நிறுவனத்துக்கு நிலத்தை விற்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுள்ளார். பின், அந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து, இடத்தை தன் பெயருக்கு மாற்றி உள்ளார்.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள நிலத்தை, உரிய அனுமதியின்றி வகை மாற்றம் செய்து, 'பட்டா' பெற்றது சட்ட விரோதமானது. எனவே, வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை அளவிட்டு, அதை மீட்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:வனப்பகுதிக்குச் சொந்தமான நிலம் எப்படி தனி நபருக்கு விற்கப்பட்டது என கேள்வி எழுப்பி, சம்பந்தப்பட்ட நிலத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். இதற்கு வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்கிறோம்.அவர் அந்த பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்து, புகைப்பட ஆதாரங்களுடன் இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.