த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் அலப்பறை: போலீஸ் எச்சரிக்கை
சோழிங்கநல்லுார், பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நேற்று, ஓ.எம்.ஆர்., சாலை சோழிங்கநல்லுார் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கே.கே., சாலையில் பந்தல் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 120 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.பெண் போலீசார் பற்றாக்குறையால், பாதுகாப்பு பணியில் ஆண் போலீசார் நின்றனர். இதை பார்த்த கட்சியினர், 'ஏன் பாதுகாப்புக்கு பெண் போலீசார் நிறுத்தவில்லை. சாலை மறியல் செய்தால் பெண்களை எப்படி அப்புறப்படுத்துவீர்கள்' என, போலீசாரிடம் கேள்வி கேட்டனர். போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென ஓ.எம்.ஆரில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். இதை எதிர்பார்க்காத ஆண் போலீசார், அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஒரு உதவி ஆய்வாளரை சூழ்ந்து கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்டனர். லாரி, கார்களில் ஏறி நின்று அலப்பறை செய்தனர். இதனால், ஓ.எம்.ஆர்., மற்றும் கே.கே. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கட்சியின் சென்னை புறநகர் மாவட்ட செயலர் சரவணனிடம், 'வாகன நெரிசலால் வாகன ஓட்டிகள் வெயிலில் சிரமப்படுகின்றனர். கலைந்து செல்லாவிட்டால் ஆயுதப்படை பெண் போலீசார் வந்து கலைத்து விடுவர்' என, போலீசார் எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.