ஆவடி கவரப்பாளையத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்
ஆவடி:சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, ஆவடி செக்போஸ்ட் முதல் கவரப்பாளையம் வரை ஒரு கி.மீ., துாரத்திற்கு பழ கடைகள், காய்கறி கடைகள், இளநீர் கடைகள், டிபன் கடைகள் என, 60க்கும் மேற்பட்ட கடைகளால் சாலை ஆக்கிரமிக்கப்பட்டது. அங்கு, பொருட்களை வாங்க வருவோர் சாலையில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி சென்று வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.குறிப்பாக, கவரப்பாளையம் டி.ஆர்.ஆர்., நகர் அருகே, தனியார் கார் நிறுவனம் ஒன்று, சாலையில் அத்துமீறி 10க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தி, திறந்தவெளி 'பார்க்கிங்' போன்று பயன்படுத்தி வந்தனர். அதேபோல், ஹார்டுவேர்ஸ் கடை ஒன்றும், சாலையோரத்தில் அனுமதியின்றி 'ஆஸ்பெட்டாஸ் ஷீட்' அடுக்கி வைத்து, வியாபாரம் செய்து வந்தது.இது குறித்து, நேற்று முன்தினம் நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், 'பொக்லைன்' இயந்திரத்தின் உதவியுடன் நேற்று ஆக்கிரமிப்பை அகற்றினர். குறிப்பாக கார்கள் விதிமீறி நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஆவடியில் மற்ற இடங்களில் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க, ஆவடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.