சதுர்த்திக்கு மளிகை காம்போ கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை
சென்னை, ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி, வரும் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு, சென்னையில், டி.யு.சி.எஸ்., எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டக சாலை உள்ளிட்ட சங்கங்களில், கொழுக்கட்டை தயாரிக்க தேவைப்படும் வெல்லம், கொழுக்கட்டை மாவு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு, குறைந்த விலைக்கு விற்பனை துவங்கியுள்ளது.அதன்படி, டி.யு.சி.எஸ்., சங்கத்தின் காமதேனு அங்காடிகளில், 199 ரூபாய்க்கு, தலா, 500 கிராம் உருண்டை வெல்லம், கொழுக்கட்டை மாவு, 250 கிராம் கருப்பு மூக்கடலை, 50 மி.லி., நெய், 100 கிராம் ஜவ்வரசி, 5 கிராம் ஏலக்காய், தலா 10 கிராம் திராட்சை, முந்திரி, 85 கிராம் சேமியா, 50 கிராம் சம்பந்தி எள்ளு ஆகியவை அடங்கிய தொகுப்பு விற்கப்படுகிறது.காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையின், 20 அங்காடிகள், 402 ரேஷன் கடைகளில், 12 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு, 299 ரூபாய்; 399 ரூபாய், 499 ரூபாய் ஆகிய விலைகளில் விற்கப்படுகிறது.இதேபோல், பல சங்கங்களில் விநாயகர் சதுர்த்திக்கு தேவைப்படும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு, சிறப்பு தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன.