சென்னை: 'சென்னை ரேஸ் கிளப்க்கு வழங்கிய 160 ஏக்கர் நிலத்துக்கான குத்தகையை ரத்து செய்வது குறித்து, நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்' என, அரசு தரப்பில், உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.சென்னை, கிண்டியில் ரேஸ் கிளப் உள்ளது. ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு, 160.68 ஏக்கர் நிலத்தை, 1945ம் ஆண்டு, சென்னை மாகாணம் சார்பில், 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. அதன் பின் தமிழக அரசு, 1970ல் குத்தகை தொகையை உயர்த்தியது. ஆனால், ரேஸ்கோர்ஸ் நிர்வாகம், குத்தகை தொகை செலுத்தாமல் இருந்தது.இந்த வகையில், 730.86 கோடி ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. அதேபோல், சென்னை மாநகராட்சிக்கு, 5.19 கோடி ரூபாயும், குடிநீர் வாரியத்திற்கு 3.50 கோடி ரூபாய்க்கும் மேல், வரி பாக்கி உள்ளது.ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு, 730.86 கோடி ரூபாய் குத்தகை பாக்கி தரும்படி, தாசில்தார் நோட்டீஸ் அனுப்பினார். அதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ரேஸ் கிளப் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், '' வாடகை பாக்கியாக கோரப்பட்டுள்ள 730.86 கோடி ரூபாயை ஒரு மாதத்துக்குள், ரேஸ் கிளப் நிர்வாகம் செலுத்த வேண்டும். இல்லையென்றால், மனுதாரரை அங்கிருந்து அகற்றி, போலீஸ் உதவியுடன் சொத்துக்களை எடுக்க வேண்டும்,'' என உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து, ரேஸ் கிளப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு, கடந்த ஆண்டு 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. 'குத்தகை ஒப்பந்தத்தில் எந்த பிரிவும் இல்லாத போது, வாடகையை உயர்த்தி நோட்டீஸ் அனுப்பியது; 99 ஆண்டு குத்தகை, 2044ல் தான் முடிகிறது' என கூறப்பட்டது. விசாரணையை, முதல் அமர்வு தள்ளி வைத்திருந்தது.பணம் செலுத்தாததால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, குத்தகையை ரத்து செய்து ஆணை வெளியிட்டது. தொடர்ந்து, கிண்டி ரேஸ்கோர்ஸ் வளாகத்திற்கு,'சீல்' வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று காலை, கிண்டி ரயில் நிலையம் அருகிலுள்ள ரேஸ்கோர்சின் இரண்டு நுழைவு வாயில்களை மூடி சீல் வைத்தனர். இதனால், பணிக்கு வந்த ஊழியர்கள், ரேஸ் பந்தயம் கட்ட வந்தவர்கள் திரும்பிச் சென்றனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ராஜசேகர் அடங்கிய அமர்வில், ரேஸ் கிளப் நிர்வாகம் சார்பில் முறையிடப்பட்டது. பிற்பகலில், அவசர வழக்காக, நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். 'காலி செய்ய அவகாசம் அளிக்காமல், இடத்தை எடுத்துக் கொள்ளவது சரியல்ல; அரசின் அத்துமீறலுக்கு நீதிமன்றம் துணை போகாது' என, நீதிபதிகள் கண்டித்தனர்.நில நிர்வாக ஆணையர் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, ''அனுமதி பெறாமல், குதிரை பந்தயம் நடக்கிறது. பொது மக்களின் பயன்பாட்டிற்காக தான், அந்த நிலத்தை எடுக்கிறோம்,'' என்றார். அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''ஒரே நேரத்தில் குத்தகையை ரத்து செய்து, இடத்தையும் எடுக்கக் கூடாது. குத்தகை ரத்து குறித்து 'நோட்டீஸ்' அனுப்பி, இடத்தை காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும். அதனால், இடத்தை காலி செய்ய அவகாசம் அளிக்கும் வகையில், குத்தகை ரத்து குறித்த உத்தரவு அனுப்பி வைக்கப்படும்,'' என்றார்.இதையடுத்து, 'குத்தகை ரத்து குறித்த நோட்டீஸ் அளித்து, இடத்தை காலி செய்வதற்கான அவகாசம் அளித்த பின், நடவடிக்கை மேற்கொள்ளலாம்' என நீதிபதிகள் தெரிவித்தனர். விசாரணையை தள்ளி வைத்தனர்.