| ADDED : மே 01, 2024 12:53 AM
கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்துார் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துபாண்டி, 62. இவர், அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், ஹோட்டல் சமையல் அறையில், இவரும் இவரின் மனைவியும் உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் ஹோட்டல் இரும்பு கேட்டின் மீது, பெட்ரோல் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில், கேட்டில் இருந்த விளம்பர பலகை சேதமடைந்தது.இது குறித்த புகாரின்படி, கிளாம்பாக்கம் மற்றும் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தியிருந்த 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான மூன்று பேர் அடையாளம் காணப்பட்டு, போலீசார் அவர்களை தேடி வந்தனர்.நேற்று முன்தினம் இரவில், கொளப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அன்பழகன், 22, ஜீவா, 20, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரையும், கிளாம்பாக்கம் போலீசார் கைது செய்து, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.