உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போக்குவரத்து நெரிசலால் தினமும் திணறும் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை நிறுவனங்கள்

போக்குவரத்து நெரிசலால் தினமும் திணறும் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை நிறுவனங்கள்

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கத்தில், 'சிட்கோ' எனும், தமிழக அரசின் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு தொழிற்பேட்டை உள்ளது. அங்கு, 450 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன.அதனருகில் மகளிர் தொழிற்பேட்டை, தனியார் தொழிற்பேட்டை மற்றும் அவற்றை சுற்றிய பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பெரும்பாலானவை, மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.ஜி.எஸ்.டி., சாலையில் பல்லாவரம், 'பாண்ட்ஸ்' சிக்னல் அருகில், பல்லாவரம் - திருநீர்மலை சாலையில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உள்ளது. இந்த சாலையில் காலை, மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால், உற்பத்தி செய்த பொருட்களை, குறித்த காலத்தில் சந்தைக்கு அனுப்ப முடியாமல், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.இதுகுறித்து, தொழிற்பேட்டை தொழில் முனைவோர் கூறியதாவது:திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை மற்றும் அதை சுற்றிய இடங்களில் உள்ள தொழில் நிறுவனங்களில், 30,000 பேர் பணிபுரிகின்றனர். ஆண்டுக்கு, 10,000 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது.அதில், 6,000 கோடி ரூபாய் உள்நாட்டு சந்தைக்கு அனுப்பப்படுகிறது. மீதி, 4,000 கோடி ரூபாய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல்வேறு இடங்களில் இருந்து வாங்கப்படும் மூலப்பொருட்கள், பல்லாவரம் - திருநீர்மலை சாலை வழியாகவே, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டைக்கு எடுத்து வரப்படுகின்றன.இந்த சாலை வழியாகவே, உற்பத்தி பொருட்கள் விமான நிலையத்திற்கும், தென் மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. துறைமுகத்திற்கு அனுப்ப, சென்னை வெளிவட்ட சாலை பயன்படுத்தப்படுகிறது.பல்லாவரம் - திருநீர்மலை சாலையில் தினமும் காலை, மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களும், 1 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கின்றன.பல்லாவரம் - திருநீர்மலை சாலையை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி, பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு அனுமதி அளிக்கப்பட்டும் பணிகளை துவக்கவில்லை.வெளிநாடுகளில் இருந்து பொருட்களை வாங்குவதற்கு, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டைக்கு, 'ஆர்டர்' தர வரும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அதிருப்தி அடைகின்றனர். இதனால், ஆர்டர் கிடைப்பதிலும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.எனவே, பொருட்களை விரைவாக சந்தைக்கு அனுப்பவும், சிரமமமின்றி ஊழியர்கள் வேலைக்கு வரவும், பல்லாவரம் - திருநீர்மலை சாலையை விரிவாக்கம் செய்யும் பணியை விரைவில் துவக்கி, செயல்பாட்டிற்கு கொண்டு வர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை