தப்பிச்சென்ற குற்றவாளி உட்பட இருவர் கைது
சென்னை,:திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் முகமது மொய்தீன், 43. வெற்றிலை, பாக்கு கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் காலை, டாக்டர் நடேசன் தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த இருவர், வீண் தகராறு செய்து தாக்கியது மட்டுமல்லாமல், கத்தி முனையில், 600 ரூபாயை பறித்துச் சென்றனர்.இதில் காயமடைந்த முகமது மொய்தீன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், அவர் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த ராயப்பேட்டை போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இதில், திருவல்லிக்கேணி பி.எம்., தர்காவைச் சேர்ந்த சீனு, 25, ராஜ்குமார், 34, ஆகியோர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று, இருவரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சீனு, சில தினங்களுக்கு முன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றபோது, தப்பிச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.