ஆவடி ரயில் நிலையத்தில் விதிமீறல் பார்க்கிங் திருமலைராஜபுரம் சாலையில் கடும் நெரிசல்
ஆவடி, மவடி ரயில் நிலையத்தின் பின்புறம், திருமலைராஜபுரம் பகுதியில் ஒரு ரயில்வே வாகன நிறுத்தம் மற்றும் ஐந்து தனியார் வாகன நிறுத்தங்கள் உள்ளன.இதில் ரயில்வே வாகன நிறுத்தத்தில் 800 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும். ஆனால் பொதுமக்கள், வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்தாமல், சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால், திருமலைராஜபுரம் சாலை பாதியாக சுருங்கி, அவசர ஊர்திகள் கூட செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசலில் திணறுகிறது. சிலர், ரயில்வே நடைமேடைக்கு செல்லும் பாதையில் கூட வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.கோடை காலம் துவங்கி உள்ளதால், வெட்டவெளியில் பாதுகாப்பின்றி நிறுத்தப்படும் வாகனங்களில் தீ விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது.அதேபோல, சமீபத்தில் அண்ணனுாரைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் சாலையில் நிறுத்தி சென்ற 'ஸ்ப்ளெண்டர்' பைக் மர்ம நபரால் திருடப்பட்டுள்ளது.எனவே, ஆர்.பி.எப்., போலீசார் மற்றும் ஆவடி, பட்டாபிராம் போக்குவரத்து போலீசார் ஒருங்கிணைந்து, விதிமீறி நிறுத்தப்படும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.விரைவில் நடவடிக்கைவிதிமீறி நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள், இரும்பு சங்கிலியால் பூட்டி அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. அதற்கு பயணியர் சங்கங்கள் வாயிலாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அபராதம் விதிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. விரைவில் பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கடும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.- ரயில்வே போலீசார்வாகன ஓட்டிகள் அலட்சியம்தனியார் வாகன நிறுத்தங்களில் 15 முதல் 20 ரூபாய் வரை தினமும் வசூலிக்கப்படுகின்றன. அதை மிச்சப்படுத்த ஆவடி, இந்து கல்லுாரி, பட்டாபிராம் ரயில் நிலையம், மார்க்கெட் பகுதி, மேம்பாலத்தின் கீழ் என அனைத்து இடங்களிலும், பயணியர் பாதுகாப்பின்றி வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். ரயில்வே, போக்குவரத்து போலீசார் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது, திருடர்களுக்கு வசதியாக உள்ளது.- சமூக ஆர்வலர்.