மெரினாவில் மாற்றுத்திறனாளிக்கான கடைகள் எத்தனை சதவீதம் ஒதுக்க முடியும்? ஐகோர்ட்
சென்னை, செப். 7---மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் வியாபாரிகளுக்கு வழங்கப்படும் தள்ளுவண்டிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை சதவீதம் ஒதுக்க முடியும் என்பது குறித்து, இரு வாரங்களில் தெரிவிக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்திற்கு, 47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு, 900 தள்ளுவண்டி கடைகள் அமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. 900 தள்ளுவண்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு என, 5 சதவீதம் ஒதுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில், மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், வழக்கறிஞர் அருண்பாபு, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சுகேந்திரன் ஆகியோர் ஆஜராகினர்.அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை சதவீத தள்ளுவண்டிகள் ஒதுக்கீடு செய்ய முடியும் என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன்,''மாற்றுத்திறனாளிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும், மாநகராட்சி கமிஷனரின் கருத்தை அறிந்து தெரிவிக்கிறேன்,'' என்றார்.இதையடுத்து, இதுகுறித்து இரு வாரங்களில் தெரிவிக்க வேண்டும் என, மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதேபோல, சென்னை மெரினா கடற்கரை 'லுாப்' சாலையின் இருபுறமும் மீனவர்கள் மீன் வியாபாரத்தில் ஈடுபடுவதால், வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவது தொடர்பாக, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு, விசாரணைக்கு வந்தது.சென்னை மாநகராட்சி தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன்,''லுாப் சாலையில் கட்டப்பட்ட மீன் சந்தை, ஆக., 12ல் திறக்கப்பட்டது.இதில், 356 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல்கட்டமாக, 64 பேருக்கு கடைகள் வழங்கப்பட்டுள்ளன. அப்பகுதி கோவில் திருவிழா காரணமாக, மற்ற கடைகள் ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள கடைகளை ஒதுக்கீடு செய்து, முழுமையாக பட்டியலை சமர்ப்பிக்க, இரண்டு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும்,'' என்றார்.இதைப் பதிவு செய்த நீதிபதிகள், இரண்டு வாரங்களுக்கு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.