1,000 ‘சி.சி.டி.வி.’ பொருத்தும் பணி: தி.நகரில் தொடக்கம்
தி.நகர்: பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், குற்றங்களை கண்காணிக்கவும் தி.நகர் தொகுதியின் முக்கிய பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, சி.எஸ்.ஆர்., எனும் நிறுவன சமூகப் பொறுப்பு நிதி மூன்று கோடி மதிப்பீட்டில் 146 இடங்களில் 350 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட உள்ளன. இதன் முதல் ‘சி.சி.டி.வி.’ கேமரா பணியை, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், தி.நகர் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இந்த கேமராக்கள் அனைத்தும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் செயல்படும் வகையில் அமைக்கப்பட உள்ளன. முகங்களை அடையாளம் காணுதல், வாகனங்களின் நடமாட்டத்தை கண்காணித்தல், மக்கள் கூட்டம் அதிகரிப்பதை கண்டறிதல் உள்ளிட்ட வசதிகள், இந்த கேமராக்களில் உள்ளன. நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ், தி.நகர் காவல் மாவட்ட துணை கமிஷனர் குமார், சென்னை தெற்கு – வடக்கு மாவட்ட செயலர் அப்புனு என்ற வேல்முருகன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.