ஐ.பி.எல்., டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்ற 11 பேர் கைது
சென்னை:கள்ளச்சந்தையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்ற, 11 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில், நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டில்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான, ஐ.பி.எல்., 'டி20' கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியை காண ரசிகர்கள் இடையே கடும் போட்டி நிலவியது. மர்ம நபர்கள் சிலர், ரசிகர்களிடம் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருவல்லிக்கேணி போலீசார், சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி, ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கள்ளச் சந்தையில் டிக்கெட்டுகள் விற்ற, சென்னை அசோக் நகரை சேர்ந்த ஸ்ரீராம்,25, கேரளாவை சேர்ந்த வினித்,28 உட்பட 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 34 டிக்கெட்டுகள் மற்றும் 30 ,000 ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.