| ADDED : நவ 14, 2025 03:08 AM
சென்னை: அபுதாபியில் நடக்க உள்ள உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து, 11 வீரர் - வீராங்கனையர் தகுதி பெற்றுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில், இம்மாதம் 21ல் துவங்கி 30ம் தேதி வரை, உலக கிக் பாக்சிங் போட்டி நடக்கவுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனையர் இதில் பங்கேற்கின்றனர். இதற்கான, சர்வதேச கிக் பாக்சிங் பயிற்சி முகாம், பெங்களூரு சி.எம்.ஆர்., பல்கலையில் இம்மாதம் 3ல் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. முகாமில், தமிழகத்தைச் சேர்ந்த 38 பேர் உட்பட நாடு முழுதும் இருந்து, மொத்தம் 260 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். முகாமில், கிக் பாக்சிங் விளையாட்டின் நுணு க்கங்கள், சத்துள்ள உணவு குறித்து ஆலோசனை வழங்கி, உலக போட்டிக்கான தேர்வும் நடந்தது. அனைத்து பயிற்சிக்கு பின், தமிழக வீராங்கனை நான்கு பேர் உட்பட 11 பேர், உலக போட்டிக்கு தேர்வாகினர். இவர்கள் உட்பட, நாடு முழுதும் இருந்து மொத்தம் 51 பேர் உலக கிக்பாக்சிங் போட்டியில் களமிறங்குகின்றனர்.