உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 18 ஆம்னி பஸ்களுக்கு ரூ.1.26 லட்சம் அபராதம்

18 ஆம்னி பஸ்களுக்கு ரூ.1.26 லட்சம் அபராதம்

ஆலந்துார், தொடர் விடுமுறைக்கு ஊருக்கு புறப்பட்ட பயணியரிடம், அதிக கட்டணம் வசூலித்த 18 ஆம்னி பேருந்துகளுக்கு 1.26 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறை என, தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு, நேற்று முன்தினம் பலரும் புறப்பட்டனர். இதனால், ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் விலை வைத்து டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. இதுகுறித்து புகார் எழுந்ததை அடுத்து, மீனம்பாக்கம், தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், மீனம்பாக்கம், பெருங்களத்துார், கிளாம்பாக்கம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்ற ஆம்னி பேருந்துகளில் பயணியரிடம் அதிகாரிகள் விசாரித்த பின், வழக்கத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்த 18 ஆம்னி பேருந்துகளுக்கு 1.26 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்தனர். தவிர, கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம், பயணியரிடம் திரும்ப வழங்கப்பட்டது. மேலும், பேருந்துகளுக்கு சாலை வரி செலுத்தப்பட்டதா, கூரையில் உடைமைகள் அதிகளவில் ஏற்றப்பட்டதா, புகை சான்று, ஓட்டுநர் உரிமம், 'பர்மிட்' உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை