ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மேலும் 2 உறுப்பினர்கள்?
சென்னை: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில், மேலும் இரண்டு உறுப்பினர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான தேர்வு குழுவை அமைத்துள்ளது.தமிழகத்தில், வீடு, மனை விற்பனை தொடர்பான பிரச்னைகளை தீர்க்க, ரியல் எஸ்டேட் ஆணையம், தீர்ப்பாயம் ஆகியவை உள்ளன. குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்வது, புகார்களை விசாரித்து இழப்பீடு கிடைக்க உத்தரவிடுவது, இந்த ஆணையத்தின் பணியாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் தலைவர், இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர். திட்டங்கள் பதிவு மற்றும் புகார்கள் அதிகமாக வருவதால், கூடுதல் அமர்வுகள் ஏற்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. எனவே, இதில் உறுப்பினர் எண்ணிக்கையை நான்காக உயர்த்த, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜெகன்நாதன், சென்னை மாநகராட்சி ஓய்வுபெற்ற தலைமை வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு ஆகியோர் அடங்கிய தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது, அவரிடம் நேர்முக உதவியாளராக இருந்தவர் சுகுமார் சிட்டிபாபு. இதற்கான உத்தரவை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.