உதிரி பாகங்களுக்கு தள்ளுபடி ஆசைகாட்டி கார் திருடிய இன்ஜினியர் உட்பட 2 பேர் கைது
ஆவடி, கார் உதிரிபாகங்களுக்கு சிறப்பு தள்ளுபடி ஆசைகாட்டி, கால்நடை ஆய்வாளரின் காரை நுாதன முறையில் திருடி சென்ற இன்ஜினியர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 45; கால்நடை ஆய்வாளர். இவர், புதிதாக வாங்கிய 'மாருதி வேகனார்' காருக்கான உதிரிபாகங்களை குறைந்த விலைக்கு வாங்குவதற்காக, பழைய பொருளை வாங்கவும் விற்கவும் செய்யும் ஓ.எல்.எக்ஸ்., எனும் 'ஆன்லைன்' தளத்தில் கடந்த மாதம் தேடியுள்ளார். அப்போது, 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம் என்ற கவர்ச்சியான விளம்பரத்தை பார்த்து, அதில் கொடுக்கப்பட்டிருந்த மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். அதில் பேசிய நபர்கள், 50 சதவீதம் தள்ளுபடியில், வீட்டுக்கு வந்து 'கூலிங் ஸ்டிக்கர், கார் மேட், சீட் கவர்' போட்டு தருவதாக கூறியுள்ளனர். கடந்த மாதம் 11ம் தேதி வீட்டுக்கு வந்த மணிகண்டன் என்பவர், காரை தங்கள் வீட்டுக்கு எடுத்து சென்று, அதை விட குறைந்த விலையில் காருக்கு மேற்படி பாகங்கள் பொருத்தி தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதை உண்மை என நம்பிய சரவணன், மணிகண்டனின் ஆதார் கார்டை வாங்கி கொண்டு, காரை கொடுத்து அனுப்பி உள்ளார். காரை எடுத்து சென்ற மணிகண்டன் காரை திருப்பி தரவில்லை. இது குறித்து ஆவடி காவல் நிலையத்தில், கடந்த மாதம் சரவணன் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில், போலி ஆதார் கார்டு பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. களமிறங்கிய போலீசார் இதையடுத்து மொபைல்போன் எண் மற்றும் ஐ.எம்.ஐ., நம்பரை 'டிராக்' செய்தபோது, சமீபத்தில் அண்ணா நகரில், வேறொரு நபரிடம் பேசியதும், அவரிடம் இதே போல் காரை திருட திட்டமிட்டதும் தெரிந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அண்ணா நகரைச் சேர்ந்த அந்த நபரிடம் பேசி, மோசடி நபர்கள் குறித்து தெரிவித்துள்ளனர். உதிரிபாகங்கள் செட் செய்து தருவதாக கூறிய மோசடி நபரை, அண்ணா நகர், எம்.எம்.டி.ஏ., காலனிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு மறைந்திருந்த தனிப்படை போலீசார், அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில், அரக்கோணத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பிரதீப், 32 என்பதும், கால்நடை ஆய்வாளர் சரவணனிடம், மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் உடந்தையாக இருந்த சூர்யாவையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.
போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி
மோசடி நபர்களிடம் விசாரித்த போலீசார் கூறியதாவது: தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா, 26 என்பவருடன் சேர்ந்து, பிரதீப் வங்கியில் கடன் வாங்கி தரும், வேலை செய்து வந்துள்ளார். வாடிக்கையாளர்கள், வங்கியில் கடன் பெறுவதற்கு தரும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு ஆகியவற்றில், வாடிக்கையாளர்களின் முகத்தை மறைத்து, அதற்கு பதிலாக பிரதீப் முகத்தை ஒட்டி, போலி ஆவணங்கள் தயாரித்து வந்துள்ளனர். அவர்கள், நீலாங்கரை, ராமாபுரம், முத்தியால்பேட்டை, நசரத்பேட்டை, தாம்பரம், ஆவடி என, ஏழுக்கும் மேற்பட்ட இடங்களில், இதே பாணியில் நுாதனமாக கார் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். திருடிய கார்களை மதுரை, திருச்சி, கரூர் உட்பட வெளி மாவட்டங்களுக்கு, விற்பனை செய்துள்ளனர். இவ்வாறு அவ ர்க ள் க ூற ின ர் .