மேலும் செய்திகள்
ஏரியில் இறந்து மிதந்த ஜிலேபி மீன்கள் அகற்றம்
14-Mar-2025
ஆவடி, ஆவடி, பெரியார் நகரில் 87.06 ஏக்கர் பரப்பில் பருத்திப்பட்டு ஏரி உள்ளது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, கடந்த 2019ல் சீரமைக்கப்பட்டு பசுமை பூங்காவாக மாற்றப்பட்டது.பருத்திப்பட்டு ஏரியில் வடக்கு பகுதியில், கழிவுநீரகற்று நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பாதாள சாக்கடை இணைப்பு வாயிலாக சேகரிக்கப்படும் கழிவு நீர், சுத்திகரிக்கப்பட்டு ஏரியில் விடப்படுகிறது.இந்த நிலையில், கடந்த 3ம் தேதி முதல் ஏரியில் டன் கணக்கில் மீன் செத்து மிதக்க துவங்கின. கடந்த வாரம் மின்வெட்டு ஏற்பட்டபோது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இயங்காத நேரத்தில், ஏரியில் கழிவுநீர் பாய்ந்து அவை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.அந்தவகையில், நேற்று வரையில் 11,500 கிலோ மீன், மீன்பிடி ஊழியர்கள் உதவியுடன் சேகரிக்கப்பட்டு, சேக்காடு குப்பை கிடங்கில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது.மேலும், தொற்று பரவாமல் இருக்க, ஏரியைச் சுற்றி சுண்ணாம்பு கலந்த 'பிளீச்சிங்' பவுடர் தெளித்து, மாநகராட்சி அதிகாரிகள் சுகாதார நடவடிக்கை மேற்கொண்டனர்.இதற்கிடையே, கடந்த 8ம் தேதி, மீன்வளத் துறையினர் ஏரியில் ஆய்வு மேற்கொண்டு, இறந்த மீன் மாதிரி மற்றும் நீர் மாதிரி ஆய்வுக்கு எடுத்து சென்றனர். ஆய்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.இந்த நிலையில், ஏரியில் தொடர்ந்து மீன்கள் செத்து மிதப்பதால், மீன்வளத்துறை அறிவுறுத்தலின்படி ஏரியில் 2,000 கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்பு கொட்டும் பணி நேற்று நடந்தது.இந்த கிளிஞ்சல் சுண்ணாம்பு நுரையாக ஏரி முழுதும் படர்ந்து, நீரில் உள்ள அமிலம் மற்றும் காரத்தன்மையை சமன் செய்து, மீன் இறப்பை கட்டுப்படுத்தும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
14-Mar-2025