லாரி மீது அரசு பஸ் மோதல் தாம்பரத்தில் 21 பேர் காயம்
தாம்பரம், திருவாரூர் மாவட்டம், தியாகராஜன்பேட்டையை சேர்ந்தவர் முத்துக்குமார், 40. கன்டெய்னர் லாரி ஓட்டுநர்.நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு, லாரியில் கட்டை ஏற்றிக்கொண்டு, மாதவரத்தில் இருந்து, சென்னை புறவழிச்சாலை வழியாக மேடவாக்கம் நோக்கி சென்றார்.தாம்பரத்தை அடுத்த திருநீர்மலை, ஒய்யாயி அம்மன் கோவில் அருகே சென்ற போது, பின்னால், மாதவரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி பயணியருடன் வந்த அரசு பேருந்து, லாரியை இடது புறம் 'ஓவர் டேக்' செய்ய முயன்றது.அப்போது, இடது புறம் கார் ஒன்று வந்ததால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது.பேருந்தை, கடலுார் மாவட்டத்தை சேர்ந்த நந்தகோபாலகிருஷ்ணன், 50, என்பவர் ஓட்டினார். இந்த விபத்தில், 11 ஆண்கள், 8 பெண்கள் என, 21 பயணியர் லேசான காயமடைந்தனர். போலீசார் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு, 19 பேர் சிகிச்சை பெற்று திரும்பினர். இருவர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.இந்த விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.