வாலிபர் அடித்து கொலை செங்குன்றத்தில் 3 பேர் கைது
செங்குன்றம், வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். செங்குன்றம், காசி விஸ்வ நாதன் தெருவில் நேற்று முன்தினம் அதிகாலை வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து செங்குன்றம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி, 27, என்பதும், திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரிய வந்தது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு செங்குன்றம், சோத்துப்பாக்கம் சாலையில் உள்ள, 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில், பெரியசாமி மது அருந்தி உள்ளார். அங்கு, நண்பர்களான செங்குன்றம் காசி விஸ்வ நாதர் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன், 'வாண்டு' தினேஷ், 22, பிரகாஷ், 26, ஆகியோரும் மது அருந்திக் கொண்டிருந்தனர். பின், மூவரும் சேர்ந்து, காசி விஸ்வநாதர் தெருவில் உள்ள 17 வயது சிறுவனின் வீட்டிற்கு சென்று மது அருந்தினர். அங்கு போதையில் தகராறு மூண்டது. நண்பர்கள் மூவரும் சேர்ந்து கல் மற்றும் கட்டையால் பெரியசாமியை தாக்கியதில் அவர் சுருண்டு விழுந்து இறந்தார். இதையடுத்து, உடலை சாலையில் கொண்டு வந்து வீசிவிட்டு மூவரும் தலைமறைவாகியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட தினேஷும், பிரகாஷும் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 17 வயது சிறுவனை, சிறார் காப்பகத்தில் சேர்த்தனர்.