ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்காமல் நுாதன திருட்டு; திருவான்மியூரில் கைவரிசை காட்டிய 3 பேர் கைது
திருவான்மியூர், திருவான்மியூரில், எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்காமல் நுாதன திருட்டில் ஈடுபட்ட மூன்று வடமாநில வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர். திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் இரண்டாவது தெருவில் உள்ள எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்., மையத்தில், பணம் எடுப்பதில் சிக்கல் இருந்துள்ளது.பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.அவர்கள், மும்பையை தலைமையிடமாக கொண்ட ஹிட்டாச்சி ஏ.டி.எம்., சர்வீஸ் என்ற நிறுவனத்திடம், மின்னஞ்சல் வாயிலாக புகார் கூறினர்.இதுகுறித்து ஆராய்ந்த சர்வீஸ் நிறுவனத்தினர், சென்னையில் சேனல் எக்ஸிக்யூட்டிவ்வாக பணிபுரியும் திருவல்லிக்கேணி, கபாலி நகரைச் சேர்ந்த நரேன்குமார், 34, என்பவரிடம், நேற்று முன்தினம் தகவல் அளித்தனர்.இதையடுத்து நரேன்குமார், சம்பந்தப்பட்ட ஏ.எடி.எம்., இயந்திரத்தை சோதனை செய்தபோது, பணம் வெளியே வரக்கூடிய இடத்தில் கருப்பு அட்டை வைத்து அடைத்து, நுாதன முறையில், தொடர்ச்சியாக பணத்தை திருடி வந்தது தெரியவந்தது.இதையடுத்து, நரேன்குமார் அளித்த புகாரின்படி திருவான்மியூர் போலீசார் விசாரணையை துவக்கினர்.ஏ.டி.எம்., மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதனை செய்தபோது, தினம் அதிகாலை இரண்டு பேர் ஏ.டி.எம்., மையத்திற்கு வருவதும், சாவியை பயன்படுத்தி, இயந்திரத்தின் முதல் கதவை திறந்து, அங்கு தேங்கி கிடக்கும் பணத்தை எடுத்துச் செல்வதும் தெரிந்தது.இதையடுத்து, ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் திருடியோரின் புகைப்படங்களை, திருவான்மியூர், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளுடன் ஒப்பிட்டு, கணினி வாயிலாக போலீசார் தேடினர். இதில், திருவான்மியூரில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த மூன்று பேரையும், நேற்று முன்தினம் இரவு, போலீசார் பிடித்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், உ.பி., மாநிலம், கான்பூரைச் சேர்ந்த, குல்தீப் சிங், 26, சுமித்யாதவ், 33, பிரிஜ்பான், 30, என்பதும், இதுபோல் ஏராளமான வங்கி ஏ.எடி.எம்.,களில் நுாதன முறையில் பணத்தை திருடி வந்ததும் தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், மூன்று பேரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.இத்திருட்டு குறித்து, போலீசார் கூறியதாவது:ஏ.டி.எம்., இயந்திரத்தினுள் இரண்டு லாக்கர் இருக்கும். முதல் லாக்கரின் சாவி போடும் அளவு, பெரும்பாலும் அனைத்து ஏ.டி.எம்., இயந்திரத்திற்கு பொதுவானதாக இருக்கும். உள்ளே இருக்கும் மற்றொரு லாக்கரினுள் தான் பணம் இருக்கும்.உள் லாக்கரில் இருக்கும் பணத்தை எடுக்க முயற்சித்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால், வெளிப்புற லாக்கரின் சாவியை போலியாக தயாரித்துள்ளனர்.அதை வைத்து, இயந்திரத்தின் வெளிப்புற லாக்கரை திறந்து, பணம் வரும் பகுதியில் சிறிய அளவில் கறுப்பு நிற அட்டையை வைத்துள்ளனர். வாடிக்கையாளர்கள் குறிப்பிடும் பணம், உள் லாக்கரில் இருந்து வந்தாலும், பணம் வரும் பகுதியை அடையாது. மாறாக, கறுப்பு அட்டையில் மோதி, இயந்திரனுள்ளே கிடக்கும்.அடுத்த நாள் அதிகாலையில் வந்து, வெளிப்புற லாக்கரை திறந்து பணத்தை எடுத்து சென்றுவிடுவர். இதுபோன்று நுாதன திருட்டை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் ஏ.டி.எம்., இயந்திரங்களில், தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பணம் திருடுவதையே வழக்கமாக வைத்துள்ளனர். வார விடுமுறை என்பதால், பலரும் பணம் எடுப்பர் என்பதால், அன்றைய நாட்களை குறிவைத்துள்ளனர்.இதுபோல், மார்ச், ஏப்ரல் மாதங்களில் லட்சக்கணக்கில் பணத்தை திருடிய மூன்று பேரும், சென்ட்ரலில் இருந்து ரயில் வாயிலாக கான்பூர் சென்று, மீண்டும் சென்னை வந்துள்ளனர்.ஏ.டி.எம்., இயந்திரத்தின் லாக்கர் சாவி இவர்களுக்கு எப்படி கிடைத்தது, இவர்களுடன் வேறு யாரேனும் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனரா என, விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.