20க்கும் மேல் வாகனங்கள் சூறை போதை ஆசாமிகள் 3 பேர் கைது
திருமுல்லைவாயில்: திருமுல்லைவாயிலில் 20க்கும் மேற்பட்ட வாகனங்களை சூறையாடிய, போதை ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், தந்தை பெரியார் நகர், பாரதியார் தெருவில், பகுதிமக்கள் தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி இருந்தனர். நேற்று அதிகாலை 2:30 மணியளவில், மர்ம நபர்கள் சிலர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டு, பட்டா கத்தியால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் வேன் உட்பட 20க்கும் மேற்பட்ட வாகனங்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து, பகுதிமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அயப்பாக்கம் போலீசார், மூவரை கைது செய்தனர். விசாரணையில், மதுபோதையில் வாகனங்களை சேதப்படுத்தியது, திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த லோகேஷ், 24, மகேஷ், 22, ரகு, 24, ஆகியோர் என தெரிந்தது. போலீசார் அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம், பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லையில், விதிமீறி 24 மணி நேரமும் இயங்கும் மதுபான கடைகள் மீது, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.