போதை ஆசாமி ஓட்டிய கார் மோதி 3 பேர் காயம்
கானத்துார்,இ.சி.ஆரில் போதை ஓட்டுநர் ஓட்டிய கார் மோதி, மூன்று பேர் காயமடைந்தனர். இ.சி.ஆரில் மாமல்லபுரத்தில் இருந்து அக்கரை நோக்கி, நேற்று இரவு ஒரு கார் அதிவேகமாக சென்றது. பனையூர் அருகே சென்றபோது, நடந்து சென்ற பெண் உட்பட இரண்டு பேர் மற்றும் சைக்கிளில் சென்ற நபர் மீது கார் மோதியது. இதில், சைக்கிளில் சென்றவர், உயிருக்கு ஆபத்தான நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவர் பெயர், முகவரி தெரியவில்லை. இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் அந்த காரை மடக்கி, ஓட்டுநரை போலீசில் ஒப்படைத்தனர். அவர் போதையில் இருந்தார். தொடர்ந்து அவரிடம் விசாரிக்கின்றனர்.