விதிமீறல் கட்டடங்களை இடிக்க 3 குழு
சென்னை, புழல் ஊராட்சி ஒன்றியத்தில், விதிமீறல் கட்டடங்களை ஆய்வு செய்து இடிக்க, மூன்று குழுக்கள் அமைத்து திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியத்தில், சென்றம்பாக்கம், விளாங்காடுபாக்கம் கிராமங்களில், விதிமுறைகளை மீறி ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. குடியிருப்புக்காக அனுமதி பெற்றவர்கள், தொழிற்சாலைகள் நடத்தி வருவதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'இரண்டு கிராமங்களில், அனுமதியற்ற கட்டுமானங்கள், தொழிற்சாலைக்காக பயன்படுத்தப்படும் குடியிருப்பு கட்டடங்கள், ஆக்கிரமிப்புகள் இருக்குமானால், அவற்றை இடித்து அகற்ற வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக, சென்றம்பாக்கம், விளாங்காடுபாக்கம் கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ள, வருவாய் துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அடங்கிய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இவர்கள் செயல்படுவர் என, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் குறிப்பிட்டுள்ளார்.