உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டைப் - 1 நீரிழிவு நோயால் 3.01 லட்சம் இளைஞர் பாதிப்பு

டைப் - 1 நீரிழிவு நோயால் 3.01 லட்சம் இளைஞர் பாதிப்பு

சென்னை: ''இந்தியாவில் 'டைப் - 1' நீரிழிவு நோயால், 3.01 லட்சம் இளம் பருவத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என, சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் தென்கிழக்கு ஆசிய தலைவர் பன்ஷி சபூ தெரிவித்தார். சென்னை எம்.வி., மருத்துவமனை சார்பில் பேராசிரியர் எம்.விஸ்வநாதன் நுாற்றாண்டு விருது மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில், டாக்டர் பன்ஷி சபூ பேசியதாவது: உலகளவில் டைப் - 1 நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு, 9.41 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தான், 20 வயதுக்கு உட்பட்ட 3.01 லட்சம் இளம்பருவத்தினர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். டைப் - 1 நீரிழிவு நோய்க்கு, ஆயுள் முழுதும் மருத்துவ கண்காணிப்பு அவசியம். தற்போது மேம்பட்ட மருத்துவ உபகரணங்கள் வாயிலாக, அதை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். குஜராத் மாநிலத்தில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த, 'கதிஷில் குஜராத்' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், பரிசோதனை மையங்களில் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனைகளை எவ்வித கட்டணமின்றி பரிசோதித்து கொள்ளலாம். அங்கு, பள்ளி அளவிலேயே நீரீழிவு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்திய நீரிழிவு ஆராய்ச்சி கழக தலைவர் விஜய் விஸ்வநாதன் பேசுகையில், ''எம்.வி., மருத்துவமனைகளிலேயே, 500க்கும் மேற்பட்ட டைப் 1 நீரிழிவு பாதித்த இளம் பருவத்தினர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பு, ஆலோசனை தேவையாக உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ