புற்றுநோய் பாதிப்பை கண்டறிய 38 நடமாடும் லேப்கள் அறிமுகம்
சென்னை: ''எட்டு வகையான புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து பெண்களை பாதுகாக்க, 38 நடமாடும் பரிசோதனை வாகனங்கள், 10 நாட்களில் அறிமுகம் செய்யப்படும்,'' என, அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடந்த பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு பத்திரம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: சிசு கொலை, குழந்தை திருமணங்கள் தடுப்பு, அவர்களின் கல்வி மேம்பாடு போன்ற நோக்கத்தில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயனடைய, 72,000 ரூபாயாக இருந்த ஆண்டு வருமானம், 1.20 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. கருத்தடை வயது, 40ல் இருந்து 49 ஆக உயர்த்தப்பட்டு உள்ளதால், இத்திட்டத்தில் அதிகம் பேர் பயன் அடைவர். மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், புற்றுநோய் கண்டறியும் பெண்களுக்கான பரிசோதனைக்காக, 38 நடமாடும் வாகனங்களின் சேவை, 10 நாட்களில் துவங்கப்படும். இதன்வாயிலாக, எட்டு வகையான புற்று நோய்களில் இருந்து, பெண்களை 100 சதவீதம் பாதுகாக்க முடியும். இந்தியாவில், தமிழகத்தில் தான் முதன்முதலாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், 14 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி விரைவில் போடப்படும். இதற்காக 36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.