செங்கல் சூளையில் கொத்தடிமைகள் ஒடிசா தொழிலாளர்கள் 43 பேர் மீட்பு
பூந்தமல்லி, பூந்தமல்லி அருகே வயலாநல்லுார் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில், வட மாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவதாக, திருவள்ளூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் நளினிதேவிக்கு புகார் வந்தது.இதையடுத்து, திருவள்ளூர் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், பூந்தமல்லி வட்டாட்சியர் சரஸ்வதி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், பூந்தமல்லி போலீசாருடன் சென்று, செங்கல் சூளையில் நேற்று ஆய்வு செய்தனர்.இதில், ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர்களை, கடந்த ஜனவரி மாதம், ஒரு நபருக்கு 35,000 ரூபாய் வீதம் கொடுத்து, செங்கல் சூளையில் பணிபுரிய அழைத்து வரப்பட்டது தெரிந்தது.வாரம்தோறும் அவர்களுக்கு, 200 ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுத்து, கொத்தடிமைகளாக நடத்தியது தெரிய வந்தது.இதையடுத்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 11 சிறுவர்கள், 32 பெரியவர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 43 பேரும், அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.மேலும், அவர்களது வங்கி கணக்கில், அரசு சார்பில், பெரியவர்கள் 32 பேருக்கு தலா 30,000 ரூபாய் வீதம் செலுத்துவதற்கான பணிகளும் நடக்கின்றன.செங்கல் சூளை உரிமையாளர் குறித்து விசாரித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.