மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து செம்மஞ்சேரியில் 5 எருமைகள் பலி
செம்மஞ்சேரி ;தாழம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம், 65. இவர், பத்துக்கும் மேற்பட்ட எருமை மாடுகளை, பல ஆண்டுகளாக வளர்ந்து வருகிறார்.இந்த மாடுகள், செம்மஞ்சேரி, காந்தி நகர், மகா நகர், ஜவகர் நகர் உள்ளிட்ட பகுதிகளில், புல் வளர்ந்துள்ள திறந்தவெளியில் தினசரி மேய்ச்சலில் ஈடுபடும்.நேற்று காலை, வழக்கம்போல் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஐந்து எருமை மாடுகள் மீது, அப்பகுதியில் கடந்த மின்கம்பி அறுந்து விழுந்தது.இதில், மின்சாரம் பாய்ந்து அவை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தன. சப்தம் கேட்டு வந்த அப்பகுதிவாசிகள், உடனே மின் இணைப்பை துண்டித்து, மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.மூன்று மணி நேர தாமதத்திற்கு பின் சம்பவ இடத்திற்கு வந்த மின் வாரிய அதிகாரிகள், அறுந்த மின்கம்பியை இணைத்து, மின் வினியோகத்தை சீராக்கினர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:இப்பகுதியில் மின்கம்பிகள் அடிக்கடி அறுந்து விழுகின்றன. இதே இடத்தில், நான்கு நாட்களுக்கு முன் மின் கம்பி அறுந்து விழுந்தது. அப்போது அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.அப்போது, மின் வாரிய அதிகாரிகள் கம்பியை இணைத்து கட்டிச் சென்றனர். புதிய கம்பி மாற்ற வலியுறுத்தியதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.அதே கம்பி அறுந்து விழுந்து, தற்போது ஐந்து எருமை மாடுகள் பலியாகியுள்ளன. இனியாவது, அறுந்த மின்கம்பிக்கு பதில், புதிய கம்பி இணைக்க, மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஆபத்தான கம்பிகள் செல்லும் பகுதிகள் குறித்து கணக்கெடுத்து, மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி, புதிய மின்கம்பி கேட்டுள்ளோம். விரைவில் வரும் என நம்புகிறோம்' என்றனர்.