உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய காதலன், நண்பருக்கு 5 ஆண்டு சிறை

பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய காதலன், நண்பருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை, தண்டையார்பேட்டை, நெடுஞ்செழியன் நகரைச் சேர்ந்த மரகதம் என்பவரின் 2வது மகள் ஷாலினி, 22. இவர், நேதாஜி நகரைச் சேர்ந்த அருண், 22, என்பவரை காதலித்து வந்தார்.மகளின் காதலை அறிந்த பெற்றோர், ஷாலினியிடம் அருணின் காதலை கைவிடும்படி அறிவுறுத்தியுள்ளனர். பெற்றோரின் அறிவுரைப்படி, காதலன் அருணிடம் பேசுவதை ஷாலினி நிறுத்தியுள்ளார்.ஆத்திரமடைந்த அருண், கடந்த 2022 மார்ச் 24ல், தன் நண்பர் ஈஸ்வரனுடன், ஷாலினி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி சண்டையிட்டுள்ளனர். இதில் மனமுடைந்த ஷாலினி, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுதொடர்பாக, பெண்கள் வன்கொடுமை தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், அருண், அவரது நண்பர் ஈஸ்வரன் ஆகியோரை, ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணை, அல்லிகுளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி ஸ்ரீதேவி முன் நடந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆரத்தி பாஸ்கரன் ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:அருண், ஈஸ்வரன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இருவருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 12,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.அபராத தொகையில், 20,000 ரூபாயை இறந்த ஷாலினியின் தாயாருக்கு வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி